Tuesday 22 November, 2011

மெல்லச் சாகும் உயிர்கள் . . . .சுடுகாடாகும் கடலூர்


கல்வி நிறுவனங்கள், வியாபாரா கூடங்கள், தொழிற்சாலைகள் என ஒரு மாவட்டத்திற்க்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்று, கடலோரத்தில் அமைந்த இயற்க்கை எழில் மிகுந்த அழகிய மாவட்டம் கடலூர். அழகிய மாவட்டம் தான் மாசுப்படாமல் இருந்தது சிப்காட் என்ற ராட்சனின் கால் பதியாத வரை.
ஆனால் இன்று எல்லாம் தலைகீழ், இயற்க்கையின் சுத்தமான காற்றை சுவாசித்த மக்கள் இன்று அமிலங்களையும் அசுத்தங்களையும் சுவாசித்து அதன் விளைவால் தன் உடலில் தேவையில்லா வேதி வினைகளுக்கு உட்படுத்தி வெகு வேகமாக மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாவட்டத்தில் வேலையின்மை போகும், மாவட்டம் முன்னேறும் இன்னும் பலவித கனவுகளுடன், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு  தன் விவசாய நிலம் கொடுத்த விவசாயிகள் எல்லாம் தன் வாரிசுகளின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாக போனதை எண்ணி கண்ணீர்  விடுவதை தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை, ஏன் அவர்களின் சுகமான வாழ்க்கையும் சுகாதார கேடாகி போனது. இது தான் தன் விரலே தன் கண்ணை குத்தியது போலவாம்.
செயல்களின் விளைவுகள் அறியாமல் என்றோ தவறாக விதைக்கப்பட்ட விதை, அதன் விளைவுகளுக்கு ஆட்பட்டு கடலூர் மாவட்டமே சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது மெல்ல, மெல்ல, . . .
கடலூர் மாவட்டத்தை சுற்றுயுள்ள கிராம, நகர மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி, சுகாதாரக் கேடாகி, அமிலத்தில் நனைக்கப்பட்ட மலர்களாய், ஒவ்வொரு நாளும் புதிய புதிய நோய்களுக்கு ஆளாகி மரணத்தை நோக்கி வெகு வேகமாக பயணிக்கிறார்கள்.
கேன்சர் போன்ற கொடிய நோய்களையும்,பெயர் தெரியா புதிய நோய்களையும் அதன் மூலம் மரணத்தையும் பரிசாக சிப்காட் தொழிற் நிறுவனங்களிடமிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனம், மற்றும் பரங்கிப்பேட்டைக்கு அருகில் அமைய உள்ள அனல் மின் நிலையம். தேவைதானா இது.
எதிர்கால வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிட்ட நிலையில், சிப்காட் கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கிடையில் தன் வாழ்வையும், வாரிசுகளையும் குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் மக்கள் விழித்தெழுவார்களா?
இது தனிமனித பிரச்சனை அல்ல! ஒரு மாவட்டத்தின் பிரச்சனை! சொந்த இடத்திலேயே கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் உடல் ஆரோக்கியமும், உயிரும் கருகிக் கொண்டிருக்கும் அவல நிலை! தான் விரும்பி வாழ்ந்த சொந்த இடம் வெகு விரைவில் சுடுகாடாகி போகும் பரிதாப நிலை!
கடலூர் மாவட்ட நண்பர்களே! விழித்தெழுங்கள் இன்று உங்களின் அலட்சியம், நாளை உங்களையும் உங்கள் வாரிசுகளையும் குழித்தோண்டி புதைத்துவிடும் என்பது நிச்சயம், அப்புறப்படுத்தப் பட வேண்டும் இரசாயண உயிர்க் கொல்லிகள் சிப்காட்டிலிருந்து, இல்லையெனில் அகற்றப்ப்ட வேண்டும் சிப்காட் தொழிற்சாலை கடலூரிலிருந்து. தமிழகத்திலும் வேண்டுமா இன்னொரு போபால் விஷவாயு மரணச் சம்பவம்?
கடலூர் மாவட்ட நண்பர்களே! உங்கள், மற்றும் உங்கள் வாரிசுகளின் உயிர், எதிர்காலம் உங்கள் கையில்.
ஊடகத்து நண்பர்களே! தன்னார்வ தொண்டு நிறுவனங்களே! எங்களின் வாழ்கையும் வாழ்வாதாரங்களும் சுடுகாடகிக்கொண்டிருக்கிறது எங்களின் இழினிலை போக்க உதவிக் கரம் தாருங்கள், உங்களின் வாயிலாக எங்களுக்கு ஒருமித்த குரல் தாருங்கள், மரணத்தை நோக்கி வெகு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மாவட்டத்து மக்களை காப்பாற்றுங்கள்  இது ஒரு தனிமனித குரலல்ல, ஒட்டுமொத்த மாவட்டத்தின் குரலாக கருதுங்கள்.
ஒட்டு மொத்த கடலூர் மாவட்ட மக்களின் சார்பாக. நன்றி!